மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப சேவைகளை செய்து வருபவர் பிரதமர் மோடிதான். இதற்காக, அனைவரின் சார்பாக அவரை நான் பாராட்ட விரும்புகிறேன் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.
டெல்லி ராஜ்காட் அருகே “காந்தி ஸ்மிருதி” என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, மகாத்மா காந்தி நினைவிடத்தின் அருகே அவரது சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “நம் நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் எண்ணற்ற இடங்களில் மகாத்மா காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஆனால், இன்றைய தினம் மகாத்மா காந்தியின் நினைவிடம் உள்ள ராஜ்காட் அருகே அவரது உருவச் சிலை திறக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பிரம்மாண்ட சிலையை நிறுவுவது நிச்சயமாக மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாகும். முந்தைய அனைத்து அரசுகளும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை மறந்து விட்டன.
ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை தனது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப மக்களுக்கு சேவை செய்து வருகிறார். பிரதமரான பிறகு மோடி செய்த முதல் வேலை தூய்மை இந்தியா இயக்கத்தை (ஸ்வச் பாரத் மிஷன்) அறிமுகம் செய்தார். உண்மையில் தூய்மை பற்றி பேசியவர் மகாத்மா காந்திதான். இதற்காக, அனைவரின் சார்பாக பிரதமர் மோடியை நான் பாராட்ட விரும்புகிறேன்” என்றார்.