மத்தியப் பிரதேச முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கே.லட்சுமணன் கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்கிறது. எனினும், 3 மாநிலங்களிலும் முதல்வர்களை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் ஏற்கெனவே 4 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான், ராஜஸ்தானில் ஏற்கெனவே 2 முறை முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியா, சத்தீஸ்கரில் ஏற்கெனவே 3 முறை முதல்வராக இருந்த ராமன் சிங் ஆகியோருக்கே மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பா.ஜ.க. தலைமை புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று கருதுகிறது. இதுதான் குழப்பத்திற்குக் காரணமாம். ஆகவே, மேற்கண்ட 3 மாநிலங்களிலும் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக மத்தியப் பார்வையாளர்களை பா.ஜ.க. தலைமை நியமித்திருக்கிறது.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் ஒரு குழுவும், ராஜஸ்தான் மாநிலத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ஒரு குழுவும், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மத்திய பழங்குடியின அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் இன்று கூடி விவாதிக்கிறது. இக்கூட்டத்திற்குப் பிறகு, சத்தீஸ்கர் மாநில முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, மத்தியப் பிரதேச முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மத்திய பார்வையாளரும், ஹரியானா முதல்வருமான மனோகர் லால் கட்டார் தலைமையில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கே.லட்சுமணன் கூறுகையில், “மத்தியப் பிரதேச முதல்வர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக, ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் குழு நாளை கூடி விவாதிக்கிறது.
அப்போது, மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைகளைப் பெற்று, முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும். காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு அலுவலகத்தில் நடந்த சோதனையில் 300 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், சோனியாவும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சி இருக்கும் இடத்தில் ஊழல்தான் இருக்கிறது. அதேசமயம், ஊழலுக்கு எதிரான சகிப்புத்தன்மை இல்லாத பார்வையை பிரதமர் மோடி கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி ஊழல்வாதிகளை சும்மா விடமாட்டார். விரைவில் காங்கிரஸ் கட்சியை அம்பலப்படுத்துவார்” என்றார்.