500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, அயோத்தியில் உள்ள தனது பிறந்த இடத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோவிலுக்கு ஜனவரி 22-ம் தேதி ஸ்ரீராமர் திரும்புவார். இதன் பிறகு, மக்களின் மனதிலும், இதயத்திலும் இடம் பெறுவார் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் ஷர்மா எழுதிய “இராமர் திரும்பி வருகிறார்” என்கிற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. விழாவில், ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே, சுவாமி கியானாநந்த மகராஜ், நீதியரசர் ஹேமந்த் குப்தா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய செயல் தலைவர் அலோக் குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய தத்தாத்ரேய ஹோசபலே, “மதத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம் எப்போதும் இருந்து வருகிறது. ஸ்ரீராம ஜென்மபூமிக்காக 72 முறை போராட்டம் நடந்தது. ஒவ்வொரு தலைமுறையும் போராடியது. ஆனால், வெற்றி கிட்டும் வரை போராட்டத்தைக் கைவிடவில்லை. இப்போராட்டத்தில் எல்லா மொழி, வர்க்கம், சமூகம் மற்றும் பிரிவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
பகவான் ஸ்ரீராமர் 14 வருட வனவாசத்திற்குப் பிறகு, தனது அரண்மனைக்குத் திரும்பினார். அதேபோல, 500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 22-ம் தேதி ஸ்ரீராமர் தனது பிறந்த இடத்தில் கட்டப்பட்ட அற்புதமான கோவிலுக்குத் திரும்புகிறார். இதன் பிறகு, ஸ்ரீராமர் மீண்டும் மக்களின் மனங்களிலும், இதயங்களிலும் இடம்பெறுவார்.
ஸ்ரீராமர் கோவில் இயக்கம், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பிற வலதுசாரி அமைப்புகளால் அயோத்தி மீட்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராமர் மங்களகரமானவர், இராமர் என்றாலே உத்வேகம். இராமர் என்பது நம்பிக்கை. அயோத்தி இராமர் கோயில் ஒரு கோயில், சுற்றுலாத் தலமல்ல. அது புனித யாத்திரையின் தூண். ஸ்ரீராமரின் அயோத்தி என்றால் துறவு. அயோத்தி என்றால் ஜனநாயகம். அயோத்தி என்றால் கண்ணியம்” என்றார்.
இத்தகவல் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.