ஈரானில் கட்டாய ஹிஜாபை எதிர்த்து வாதிடும் நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி, சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகமதி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். 51 வயதான அவருக்கு நார்வேயின் ஒஸ்லோவில் நகரில் டிசம்பர் 10 ஆம் தேதி விருது வழங்கப்படுகிறது. ஆனால் அவர் ஈரானில் சிறையில் இருப்பதால் அவர் கலந்து கொள்ள முடியவில்லை.
அவரது கணவரும் ஈரானிய ஊடகவியலாளருமான தாகி ரஹ்மானி மற்றும் அவரது இளைய சகோதரர் ஹமித்ரேசா முகமதி ஆகியோர் ஒஸ்லோவில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நர்கஸ் முகமதி சிறையில் இருக்கிறார், மேலும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார் என சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தனர்.
ஈரானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக அக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். அவர் கட்டாய ஹிஜாப் மற்றும் மரண தண்டனைக்கு எதிராக வாதிட்டதற்காக அறியப்பட்டவர்.
2021ஆம் ஆண்டு முதல் தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அலி ரஹ்மானி மற்றும் கியானா ரஹ்மானி, அவரது 17 வயது இரட்டையர்கள், 2015 முதல் பிரான்சில் வசித்து வருகின்றனர். ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளாக அவர்களின் தாயைப் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.