குட்கா நிறுவன விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக, நடிகர்கள் அக்ஷய் குமார், ஷாருக்கான் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய் குமார், ஷாருக்கான் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், குட்கா பொருட்களின் விளம்பரங்களில் நடித்ததற்கு எதிராக, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, அக்ஷய் குமார், ஷாருக்கான் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோருக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், இதே வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாகவும், எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
‘குட்கா’ நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்த நடிகர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலில் வாதிட்ட மனுதாரரின் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்க மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அமிதாப் பச்சன் குட்கா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ஏற்கனவே ரத்து செய்துவிட்ட நிலையில், தனது விளம்பரத்தைக் காட்டி வரும் குட்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையை அடுத்த ஆண்டு மே 9-ஆம் தேதிக்கு நீதிபடி ஒத்திவைத்தார்.
விளம்பரம் ஒளிபரப்பப்பட்டபோது, இந்த நடிகர்கள் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக, அக்ஷய்குமார் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினார்.