ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சி 2்-வது முறையாக மீண்டும் அமைந்த நிலையில், கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் நீீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்தது.
இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி 16 நாட்கள் நடைபெற்றது. இந்த வழக்குகளில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
அதேபோல, அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு மத்திய அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று வழங்குகிறது. இத்தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.