பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என் மக்கள் உறுதியளிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மா வலியுறுத்தி இருக்கிறார்.
அஸ்ஸாம் மாநிலப் போராட்டத்தில் உயர் நீத்த தியாகிகளின் நினைவாக “ஸ்வாஹித் திவாஸ்” நிகழ்ச்சி, கௌஹாத்தியில் உள்ள போராகவ்னில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற ‘ஸ்வாஹித் திவாஸ்’ நிகழ்ச்சியில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா கலந்துகொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிஸ்வாஸ் ஷர்மா, “பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, அஸ்ஸாம் மக்கள் ஒவ்வொருவரும் தங்களது நிலத்தை சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவருக்கு விற்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்போதுதான், நமது சமூகம் பாதுகாக்கப்படும்.
சில குடும்பங்கள் தங்கள் நிலத்தை பொருளாதார நலனுக்காக விற்கிறார்கள். ஆனால், பல குடும்பங்களுக்கு பணம் தேவையில்லை. எனினும், அவர்களும் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்கிறார்கள். எனவே, எங்கள் நிலத்தை இனி சந்தேகப்படும்படியான வெளிநாட்டவருக்கு விற்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்போம்.
மேலும், மஜூலி, பர்பேட்டா மற்றும் படத்ராவா போன்ற இடங்களில் வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்பனை செய்வதைத் தடை செய்யும் வகையில், புதிய சட்டத்தை அரசு கொண்டு வரும். சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான 6 ஆண்டுகால போராட்டம் வெறும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.
தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அஸ்ஸாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று கனவு கண்டனர். ஆனால், மாநில இளைஞர்களோ வேலை செய்ய விருப்பமில்லாமல் இருக்கின்றனர். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வெளிநாட்டினர், முக்கியமான இடங்களில் வர்த்தகத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.
எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நிதி வளர்ச்சியும், கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாப்பதும் முக்கியம். ஆகவே, மாநில மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் உழைப்பின் கண்ணியத்தைப் பாராட்ட வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) புனிதத்தன்மையை கெடுக்கும் வகையில், சில அதிகாரிகள் மோசடியாக சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர் பெயர்களைச் சேர்த்திருக்கிறார்கள். இவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்” என்றார்.