நாங்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் இலக்கு நிர்ணயித்தால், காங்கிரஸ் கட்சி 400 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கிண்டல் செய்திருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் தீரஜ் சாஹூ. இவர், ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மதுபானத் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, மேற்கண்ட 3 மாநிலங்களிலும் தீரஜ் சாஹூவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி அதிரடியாக சோதனையைத் தொடங்கினர். இச்சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுவரை சுமார் 350 கோடி ரூபாய்க்கும் மேலாக ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இப்பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல, வருமான வரித்துறையினரின் சோதனையும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் இலக்கான 400 இடங்களுடன், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் ஊழலுடன் ஒப்பிட்டு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கிண்டல் செய்திருக்கிறார். இதுகுறித்து அனுராக் தாக்கூர் கூறுகையில், “பா.ஜ.க. மக்களிடம் இருந்து தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் பொது நலத்திட்டக் கொள்கைதான் காரணம். அனைத்துத் துறைகளிலும் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.
நரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் தலைவர் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊழலில் ஈடுபட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே எப்போதும் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனால்தான் அக்கட்சி எப்போதுமே அமக்கலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஆகியவற்றிற்கு எதிராக நிற்கிறது” என்று கூறியிருக்கிறார்.