இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக சோபியா டங்க்லி மற்றும் மியா ஆகியோர் களமிறங்கினர்.
முதல் ஓவரில் 3 வது பந்திலேயே மியா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த இரண்டு ஓவரிலேயே சோபியா டங்க்லி 1 சிக்சர் மற்றும் 1 பௌண்டரி அடித்து 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஆலிஸ் கேப்ஸி 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் சிறப்பாக விளையாடி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய எமி ஜோன்ஸ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பின்பு களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக சைகா இஷாக் மற்றும் ஸ்ரேயங்கா பட்டீல் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ரேனுகா சிங் மற்றும் அமன்ஜோத் கவுர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷாபாலி வர்மா ஆகியோர் களமிறங்கினர். 3 வது ஓவரின் முதல் பந்தில் ஷாபாலி அருமை 6 ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா, மந்தனா கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.
12 வது ஓவரில் ஜெமிமா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய தீப்தி சர்மா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அரைசதம் எடுப்பார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த மந்தனா 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 19 ஓவர்கள் முடிவில் இந்தியா அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்த வெற்றி பெற்றது. . இருப்பினும் இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து அணிக்கே கோப்பை வழங்கப்பட்டது.
மேலும் இப்போட்டியில் ஆட்ட நாயகி விருதை 4 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய ஸ்ரேயங்கா பட்டீலுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகி விருது இங்கிலாந்து அணியின் நாட் ஸ்கிவர்-ப்ரண்டுக்கு வழங்கப்பட்டது.