நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை. இங்குள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷம் அன்று, திருக்கோவிலில் அமைந்துள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன்படி, கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ தினத்தில் ஆலயத்தின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு அரிசிமாவு, பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும், பக்தர்களால் வழங்கப்பட்ட அருகம்புல், தாமரை, வில்வ இலை, மலர்கள் இவற்றை மாலையாகக் கோர்த்து நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணை முட்டும் அளவு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.