உங்கள் தலைவருக்காக உங்களது உயிரை இழக்காதீர்கள். சரணடைவதுதான் உங்களுக்கு ஒரே வழி என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் நாட்டின் முப்படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகிறார்கள்.
ஏன்டா தொட்டோம் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் கதறும் அளவுக்கு, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அசுரத் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருகிறது. விமானப்படைத் தாக்குதலில் காஸா நகரின் வடக்குப் பகுதியை சின்னாபின்னமாக்கிய இஸ்ரேல் இராணுவம், தற்போது தெற்குப் பகுதியிலும் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது.
இதனிடையே, இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ஹமாஸ் தீவிரவாதிகள், பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று இஸ்ரேலை மிரட்டிப் பார்த்தது. ஆனால், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காத இஸ்ரேல் இராணுவம் தெற்கு காஸாவில் குண்டுமழை பொழிந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் மக்களோடு மக்களாக பதுங்கி இருந்த தீவிரவாதிகள் உயிரிழந்து வருகிறார்கள்.
எனவே, இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் உயிரை இழப்பதை விட, சரணடைந்து உயிர் வாழ்வதே மேல் என்று கருதி, ஹமாஸ் தீவிரவாதிகள் பலரும் இஸ்ரேல் இராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். இதையடுத்து, சரணடைவதுதான் உங்களுக்கு ஒரே வழி என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்திருக்கும் எச்சரிக்கையில், “போர் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கி விட்டது. எனவே, போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும். உங்கள் தலைவருக்காக உங்களது உயிரை இழக்காதீர்கள். சரணடைவதுதான் உங்களுக்கு ஒரே வழி. ஏற்கெனவே, பல ஹமாஸ் தீவிரவாதிகள் எங்கள் படைகளிடம் சரணடைந்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.