மிக்ஜாம் புயல் மழையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அது வட சென்னை மக்கள் தான். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெள்ளத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒரு பக்கம் மழை நீரும், மறு பக்கம் கழிவு நீரும் சூழ்ந்த நிலையில் மக்கள் தவித்துக் கொண்டிருந்த போது, மக்களை எட்டிக்கூடப் பார்க்காத ஆர்.கே. நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எபிநேசர், நிவாரண உதவி டோக்கன்களை வழங்குவதற்காக வந்துள்ளார்.
மழை பெய்தபோது வராத நீங்கள், இப்போது வந்தது ஏன்? என்று பொது மக்கள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்,
இதனால், ஆவேசம் அடைந்த ஆர்.கே. நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசரும், அவரது ஆதரவாளர்களும் கண்மூடித்தனமாகப் பொது மக்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும், அதில், ஒருவர் மண்டை உடைந்து ரத்தக்காயங்களுடன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது மக்களைத் தாக்கிய சட்டப் பேரவை உறுப்பினர் எபிநேசரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும், தாக்குதலில் படுகாயமடைந்த பொது மக்களுக்குத் தலா ஒரு லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பொது மக்களை தாக்கிய திமுக எம்எல்ஏவை கைது செய்யாவிட்டால், தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிடவும், அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.