கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு வரத் தயாராக இருப்பதாகவும், ஐந்தாறு மாதங்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும் அம்மாநில மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கூறியிருப்பது பெரும் பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த சித்தராமையா முதல்வராக இருக்கிறார்.
அதேசமயம், கடந்த முறை ஆட்சியில் இருந்த பா.ஜ.க. வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோல, பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்து, இத்தேர்தலில் தனியாக களம்கண்ட மதச்சார்பற்றி ஜனதா தளம் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலா காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து 6 மாத காலம்கூட முடிவடையாத நிலையில், உட்கட்சிப் பூசல் தலைவிரித்து ஆடுகிறது. முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங் கார்கே ஆகியோர் தலைமையில் பல கோஷ்டிகள் உருவாகி இருக்கின்றன.
இதை மெய்ப்பிக்கும் வகையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், எதிர்கட்சித் தலைவர் அசோக், எம்.எல்.ஏ. பசனகவுடா பாட்டீல் எத்னால் உட்பட பலரும், “காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க எங்களைவிட உங்கள் கட்சிக்காரர்களே அதிக முனைப்புடன் செயல்படுகின்றனர். ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் அரசு கவிழும்” என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில்தான், மேற்கண்ட கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்குத் தாவத் தயாராக இருப்பதாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கூறியிருக்கிறார். இதுகுறித்து குமாரசாமி கர்நாடக மாநிலம் ஹாசனில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தன்னுடன் 50 எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு, பா.ஜ.க.வுக்கு வருவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார்.
ஆனால், இதற்கு ஐந்தாறு மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். சாதாரண தலைவர்கள் 50 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. தலைவர்களைச் சந்திக்க முடியுமா? தாங்கள் செய்திருக்கும் தவறுகளை சரி செய்துகொள்வதற்காக அவர்கள் பா.ஜ.க.வுக்குச் செல்வதாக, எனக்குத் தகவல் வந்திருக்கிறது. ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் அரசு என்னவாகிறது என்பதைப் பாருங்கள். மகாராஷ்டிராவில் நடந்தது போன்று கர்நாடகாவிலும் நடக்க வாய்ப்பிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
குமாரசாமியின் இந்த பேட்டி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.