ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரவு நீக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
1954-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் முறைப்படி இந்தியாவுடன் இணைந்த பிறகு, அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நடைமுறைக்கு வந்தது. இந்த சிறப்பு அந்தஸ்தின்படி, இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியைக் கொண்டிருந்தது.
அதேபோல, இந்திய நாடாளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம் ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது. எனினும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகை உண்டு.
மேலும், இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடி உண்டு. ஆயினும், இக்கொடியை இந்திய தேசியக் கொடியுடன் சேர்த்தே ஏற்ற வேண்டும். தவிர, இம்மாநிலத்திற்கு தனி அரசியல் சாசனமும் உண்டு. ஆளுநரை நியமிக்கும்போது, அம்மாநில முதல்வரை ஆலோசித்தப் பின்னரே நியமிக்க வேண்டும்.
அதோடு, இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளை வாங்குவதும் தடை செய்யப்பட்டது. இப்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தன.
இந்த நிலையில், 2-வது முறையாக மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பா.ஜ.க. தலைமையிலான அரசு, 2019 ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்தது. மேலும், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.
இதை எதிர்த்து எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களின் மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பில் முக்கியமான 7 அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதாவது, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு தனி இறையாண்மை உரிமை இல்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனத்தை எதிர்த்துப் போராடுவது சட்டப்பூர்வமானது அல்ல. சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக ஏற்பாடுதான்.
அரசியலமைப்புச் சபை கலைக்கப்பட்ட பின்னரும் குடியரசுத் தலைவரின் உத்தரவுகளுக்கு எந்த தடையும் இல்லை. குடியரசுத் தலைவரின் அதிகாரப் பிரயோகம் தீங்கிழைக்கும் வகையில் இல்லை மற்றும் மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை. லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மாற்றுவது சட்டப்பூர்வமானது. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்” என்பதுதான்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வாசித்த தீர்ப்பின் முழு விவரம் இதுதான்… “ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும்போது, மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது. குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும்போது, மாற்ற முடியாத முடிவுகளை மத்திய அரசு எடுக்க முடியாது என்ற வாதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும்போது மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுக்கலாம். அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவு நிரந்தரமானது அல்ல. 370-வது சட்டப்பிரிவை நீக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவு தற்காலிகமானது. எனவே, ஜம்மு காஷ்மீர் மீதான 370-வது பிரிவை ரத்து செய்தது செல்லும்.
அதோடு, 370-வது சட்டப்பிரிவை நீக்க மாநில அரசிடம் கருத்துக் கேட்க அவசியம் இல்லை. மேலும், 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும். லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்த முடிவு செல்லும். ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரைகள் குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது.
இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும். மாநிலத்தில் போர் போன்ற சூழல் நிலவுவதால் சட்டப்பிரிவு 370 தற்காலிக ஏற்பாடு. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது அரசியலமைப்பின் 1 மற்றும் 370-வது பிரிவுகளில் இருந்து தெளிவாகிறது” என்று கூறியிருக்கிறார்.
இந்தத் தீர்ப்பு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. காரணம், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நிறுத்தப்பட்டபோது, பா.ஜ.க. தரப்பில் 3 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
அவை, அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கம் ஆகியவைதான். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான முதல் அரசில் மேற்கண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.
அதேசமயம், 2-வது முறை பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதேபோல, அதே ஆண்டு நவம்பர் மாதம் அயோத்தி விவகாரத்தில் சாதகமான தீர்ப்புக் கிடைத்தது. மேலும், பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.
ஆகவே, நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செல்லும் என்று மத்திய அரசுக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, பிரதமர் மோடிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
இதனால்தான் பிரதமர் மோடியும் தீர்ப்பு வெளியானவுடன், “இன்றைய தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.