பள்ளிக்கரணைக்கு இந்த ஆண்டு பழுப்பு நிறத்தில் 800க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன.
சென்னை, வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்புநிலம், வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இப்பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் கூழைக்கடா, கருந்தலை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட, 196 வகை பறவைகள் வந்து செல்வது, கணக்கெடுப்பில் உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இந்த ஆண்டு, 800க்கும் மேற்பட்ட கூழைக்கடா பறவைகள் வந்துள்ளன. இதில் அரிய நிகழ்வாக, பழுப்பு நிறத்தில் 2 கூழைக்கடா வந்திருப்பது, சில நாட்களுக்கு முன் தெரியவந்துள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் காரணமாக பெய்த பெருமழையால், பள்ளிக்கரணை சதுப்புநில பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
புயலுக்குப் பின் பள்ளிக்கரணையில் பறவைகள் நிலவரம் குறித்து அறிய வனத்துறையுடன் இணைந்து, கணக்கெடுப்பில் ஈடுபடும் ‘தி நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பினர், கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, சதுப்புநிலத்தில் பிரதான பகுதியில், வழக்கமாகக் கூழைக்கடா பறவைகள் தங்கும் இடங்களில், அதனுடன் சேர்ந்து, 20க்கும் மேற்பட்ட கறுப்பு நிற கூழைக்கடாக்கள் இருப்பது தெரியவந்தது.