சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 6-வது முறையாக இன்று சம்மன் அனுப்பி இருக்கிறது.
ஜார்க்கண்ட் முதல்வராக இருப்பவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன். முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மகனான இவர், 2019-ம் ஆண்டு மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். முதல்வராக இருக்கும் இவரே, சுரங்கத் துறையையும் தனது வசம் வைத்திருக்கிறார்.
அந்த வகையில், தனது உதவியாளருக்கு முறைகேடாக சுரங்கம் ஒதுக்கியது, அதன் மூலம் பண மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹேமந்த் சோரன் மீது எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, சமூகநலத்துறை இயக்குநராகவும், ராஞ்சியின் ஆணையராகவும் பணியாற்றிய சாவி ராஜன் உட்பட 14 பேரை கைது செய்திருக்கிறது.
அதேசமயம், சட்ட விரோத நிலக்கரிச் சுரங்க வழக்கில் ஹேமந்த் சோரனிடம் கடந்த ஆண்டு நவம்பா் 17-ம் தேதி அமலாக்கத் துறை சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதன் பிறகு, இராணுவ நில முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.
இதையடுத்து, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடா்பாக விசாரிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து, ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகக் கோரி 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அதேசமயம், அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகுமாறு கோரி 6-வது முறையாக ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.