ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா 2023 ஆகியவற்றை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது. எனவே, அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய பா.ஜ.க. அரசால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிரவாதம் ஒடுக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் கடந்த ஜூலை மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து, தற்போது நடந்துவரும் குளிர்கால கூட்டத் தொடரில் இந்த 2 மசோதாக்களும் டிசம்பர் 5-ம்தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. பின்னர், 2 மசோதாக்களையும் டிசம்பர் 6-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்கள் மீதான விவாதங்கள் மக்களவையில் நடைபெற்றது. விவாதம் நிறைவு பெற்ற நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மசோதாக்களுக்கு ஆதரவாக 370 வாக்குகளும், எதிராக 70 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட 2 மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், மேற்கண்ட 2 மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்திருக்கிறார். தொடர்ந்து, மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மூலம் மாநிலத்தில் பட்டியலின மக்கள், பழங்குடியினர், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. அதேபோல, ஜம்மு காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதாவானது புலம்பெயா்ந்த சமூகத்திலிருந்து ஒருவரையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஒருவரையும் ஜம்மு காஷ்மீா் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்கிறது.