1949 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 -ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் ராமோஜி ராவ் க்யெட்வாட்-க்கும், ரமாபாயிக்கும் 4-வது மகனாக பிறந்தார். இவருக்கு 2 சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
தனது 5 வயதில், தாயை இழந்த ரஜினிகாந்த், பெங்களூரில் உள்ள ஆச்சாரியா பாடசாலை, விவேகானந்த பாலகச் சங்கத்தில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பின்னர், பெங்களூருவில் கண்டக்டராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர், வாழ்க்கையில் ஏதையாவது சாதிக்கவேண்டும் என்ற வெறியோடு சென்னைக்கு புறப்பட்டார். நண்பர்கள் உதவியோடு சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தவர், 1975 -ம் ஆண்டு, இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.
1976 -ல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சுத் திரைப்படம் ரஜினிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ரஜினி வில்லனாக நடித்த 16 வயதினிலே படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. புகழின் உச்சிக்கே சென்றார்.
ரஜினி நடித்த 100 -வது படமான ஸ்ரீராகவேந்திரா திரைப்படம் ரஜினிக்கு வித்தியாசமான நடிப்பு அனுபவத்தைப் பெற்றுத்தந்தது. பின்னர் வெளிவந்த பணக்காரன், அதிசயப்பிறவி, தளபதி, அண்ணாமலை, எஜமான், உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
இதில், 1995-ல் ஆண்டு வெளி வந்த முத்து திரைப்படம், இந்தியாவைத் தாண்டி ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சாக்கைப்போடு போட்டது. அதுமட்டுமல்லாமல், மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் இதுவரை சுமார் 165 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒவ்வொரு படம் திரைக்கு வந்ததும், இமயமலைக்குச் செல்வதை ரஜினி வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் ஸ்டைல் என்றாலும் சரி, அல்லது பஞ்ச் டயலாக்ஸ் என்றாலும், அனைவரின் மனத்திலும் நினைவுக்கு வருபவர் ரஜினி மட்டுமே.
ஒரு பக்கம் வசூல் சாதனையில் தூள் கிளப்பிய ரஜினி மறுபக்கம், கலைமாமணி தொடங்கி எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
1978-ல் முதல் முறையாக ’முள்ளும் மலரும்’ படத்திற்காகத் தமிழக அரசின் சிறப்பு விருதை பெற்றார். மூன்று முகம், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி என 6 முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார்.
2000-ல் ரஜினிக்கு பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டது. 2016-ல் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷன் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை தனது ஸ்டைலான நடிப்பு முலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது இதயங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார் ரஜினி என்றால் அது மிகையல்ல.
2023ம்- வருடம் தமிழில் பல கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த படம் ரஜினி நடித்த ஜெயிலர் என்பது குறிப்பிடத்தக்கது.