ஞானவாபி மசூதி வழக்கில், அறிவியல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரகாலம் அவகாசம் அளித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் அமைந்திருக்கிறது. இதையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியானது, 17-ம் நூற்றாண்டில் முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தில் இந்து கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக இந்துக்கள் கூறிவருகின்றனர்.
இதுகுறித்து இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை எதிர்த்து மசூதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்படவே, உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
உச்ச நீதிமன்றமும் கைவிரித்து விடவே, மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்துமாறு கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஜூலை 24-ம் தேதி தனது ஆய்வை இந்திய தொல்லியல் துறை தொடங்கியது.
இந்த ஆய்வறிக்கையை நவம்பர் 17-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், தொல்லியல் துறை கூடுதல் அவகாசம் கேட்டதால் நவம்பர் 28-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. இதன் பிறகும் தொல்லியல் துறை மீண்டும் 15 நாட்கள் அவகாசம் கோரியது.
ஆனால், 10 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கிய நீதிமன்றம், குறிப்பிட்ட நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நவம்பர் 30-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. எனினும், அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு வாரகாலம் அவகாசம் கேட்டு தொல்லியல் துறை மீண்டும் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதி தொடர்பான அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அடுத்த விசாரணையை டிசம்பர் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.