எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக, பூட்டானுடன் சீனா பேச்சு நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு எல்லையில் தனியாக கிராமத்தையும், இராணுவ முகாம்களையும் அமைத்து வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு பக்கம் சீனாவுடனும், மற்றொரு பக்கம் பூட்டானுடனும் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு பூட்டானின் டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்ற முயன்றது. ஆனால், இப்பகுதி 3 நாடுகளும் இணையும் இடத்தில் இருகிறது.
அந்த வகையில், பூட்டானின் டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்றி விட்டால், நமது நாட்டு எல்லைக்குள் எளித்ல ஊடுருவுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டோக்லாம் எல்லையில் இந்தியா படைகளைக் குவித்தது.
இந்த சூழலில், நீண்டகாலமாக நிலவிவரும் எல்லைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில், தற்போது பூட்டானும், சீனாவும் ஈடுபட்டிருக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கி இருக்கிறது. இதனிடையே, வடக்கு பூட்டானின் ஜாகர்லாங்க் பள்ளத்தாக்கு பகுதியில், சீனா அசுர வேகத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, ஜாகர்லாங்க் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனா 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளை கட்டி இருக்கிறது. மேலும், தனது இராணுவ முகாமையும் சீனா உருவாக்கி வருகிறது. இந்த இடம் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட சேட்டிலைட் படங்களில் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அந்த இடம் ஒரு காலத்தில் தங்களது மேய்ச்சல் பகுதியாக இருந்ததாகக் கூறி, சீனா ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, எல்லை விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில், சீனா விதிக்கும் நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் பூட்டான் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
அதேசமயம், இப்பகுதி நமது வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து, 50 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. ஆகவே, இப்பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டால், எதிர்காலத்தில் நம் நாட்டுக்குள் ஊடுருவி நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.