கோவிந்தா என்று இறை நாமம் சொன்னவர் மீது தாக்குதல் நடத்துவதா? என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் கருவறை அருகே கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு பெருமாளை வணங்கியுள்ளார். அவர் சபரிமலை செல்வதற்கு ஐயப்ப விரதம் மேற்கொண்டு மாலை அணிந்துள்ளார்.
கோவிந்தா நாமம் எழுப்புவதைக் கண்ட அறநிலையத் துறை ஊழியர்கள் அவரோடு வாக்குவாதம் செய்து அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் ரத்தம் சொட்டச்சொட்ட கோவிலுக்குள்ளேயே பக்தர் தரையில் அமர்ந்து கதறி அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறைக்கும் அதன் ஊழியர்களுக்கும் பக்தியும் இல்லை, பக்தர்கள் மீது பரிவும் கிடையாது, ஆகம விதிகளும், அடிப்படையும் தெரியாது.
வழிபாட்டுத்தலத்திற்குள் இதுபோல அவமதிப்பதும், அடித்து அச்சுறுத்துவதும் உலகத்தில் எந்த மூலையிலும் பார்க்க முடியாத காட்சியாகும். பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் எனும் பாரதியின் கூற்று நூறு சதவீதம் திராவிட மாடல் ஆட்சிக்கு பொருந்தும்.
திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதைத் தடுப்பதற்கு அநியாயக் கட்டணம் வசூலித்தார்கள். அப்பட்டமாக ஆகம விதிகளை மீறினார்கள். மடாதிபதிகளைத் துறவியர்களை அவமதித்தார்கள்.
தற்போது பழனி திருச்செந்தூரில் தொடங்கி ஸ்ரீரங்கம் வரை பக்தர்கள் மீது கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றி இருக்கிறார்கள். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதற்குக் காரணமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பக்தருக்கு உரிய இழப்பீடு வழங்கி சகல மரியாதையோடு சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் பக்தர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.