காஞ்சிபுரம் மாவட்டம் நடுவரப்பட்டு பகுதியில் உள்ள ஏரி உடைந்து, விளை நிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
கனமழையின் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது, இயல்பு நிலை திரும்பி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. அந்த வகையில், நடுவரப்பட்டு பகுதியில் உள்ள ஏரியும் நிரம்பி வழிந்தது. இந்த ஏரி மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஏராளமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. மேலும், அதிகாலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் வீட்டில் உறங்கி கொண்டிருந்த பொதுமக்கள் வெளியேறினர். இதனால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காலையிலேயே கடும் அவதி அடைந்தனர்.
இந்த ஏரி ஆக்கிரமிப்பு நபர்களால் உடைக்கப்பட்டதா? அல்லது தானாக உடைந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரி உடைந்து, விளை நிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.