கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் கான் வாகனத்தின் மீது எஸ்.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், தன் மீது தாக்குதல் நடத்த முதல்வர் பினராயி விஜயன் சதி செய்திருப்பதாக ஆளுநர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிஃப் கானுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. மாநில அரசின் அவசரச் சட்டங்களில் கையெழுத்திடாமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த சூழலில், ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது மா.கம்யூ. கட்சியின் எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஷயம் இதுதான்… கேரள ஆளுநர் ஆரிஃப் கான் விமான நிலையம் செல்வதற்காக ஆளுநர் மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டார். கார் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வழிமறித்த ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்புத் (எஸ்.எஃப்.ஐ.) தொண்டர்கள், ஆளுநருக்கு கருப்புக் கொடி காண்பித்தனர். மேலும், கார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆரிப் கான், “எனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இச்சம்பவம் தற்செயலான சம்பவம் அல்ல. வேண்டுமென்றே என்னை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்.
என்னை உடல் ரீதியாக காயப்படுத்த சதி செய்து இவர்களை அனுப்புவது முதல்வர் பினராயி விஜயன் தான். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்னை நோக்கி கருப்புக் கொடியை காட்டியது மட்டுமல்லாமல், காரின் இருபுறத்திலும் தாக்கினர். அரசியலில் கருத்து வேறுபாடு உடல் ரீதியான வன்முறைக்கு வழிவகுக்கக் கூடாது.
எனது காரை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கருப்புக் கொடி காட்டியதோடு வாகனத்தையும் தாக்கினர். முதல்வர் நிகழ்ச்சியில் இதுபோன்று போராட்டக்காரர்கள் அனுமதிக்கப்படுவார்களா? முதல்வரின் கார் அருகே யாரேனும் வர இயலுமா? அதற்கு காவல்துறை அனுமதிக்குமா? ஆனால், எனது கார் சென்ற வழியில் போராட்டக்காரர்கள் இருந்தனர். கருப்புக் கொடி காட்டினர், முற்றுகையிட்டனர், காரை தாக்கினர்.
உடனே போலீஸார் அவசர அவசரமாக அவர்களை அங்கிருந்த கார்களுக்குள் தள்ளினார்கள். அவ்வளவுதான் அவர்கள் அங்கிருந்து கார்களில் பறந்து விட்டனர். அதனால்தான் சொல்கிறேன் இது நிச்சயமாக பினராயி விஜயனின் சதி என்று. அவர்தான் என்னைத் தாக்க ஆட்களை அனுப்பியுள்ளார். திருவனந்தபுரம் சாலைகளை குண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்” என்றார்.
இதனிடையே, ஆளுநர் ஆரிஃப் கான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்குச் செல்லும் பாதை குறித்த விபரங்கள் எப்படி லீக்கானது? கவர்னர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது எப்படி என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதேசமயம், உளவுத்துறையினரிடம் இருந்து தகவல் வெளியாகி ஆளுநர் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.