மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மோகன் யாதவ், அம்மாநில ஆளுநர் மங்குபாய் படேலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், நாளை முதல்வராகப் பதவியேற்கிறார்.
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்கிறது. இதையடுத்து, 3 மாநில முதல்வர்களையும் தேர்வு செய்வதற்காக மத்தியப் பார்வையாளர்களை நியமித்தது.
அதன்படி, மத்தியப் பிரதேச மாநில மத்தியப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு தலைவர் கே.லட்சுமண் மற்றும் கட்சியின் தேசியச் செயலாளர் ஆஷா லக்ரா ஆகியோர் நேற்று அம்மாநிலத்துக்குச் சென்றனர்.
பின்னர், தலைநகர் போபால் நகரில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில், மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் அக்கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உஜ்ஜைனி தக்ஷின் தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, மோகன் யாதவ் அம்மாநில ஆளுநர் மங்குபாய் படேலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் நாளை பதவியேற்கிறார். அவருடன் துணை முதல்வர்களாகத் தேர்வு செய்யப்பட்ட ஜெகதீஷ் தேவ்தா, ராஜேஷ் சுக்லா ஆகியோரும் பதவியேற்கின்றனர்.