பாகிஸ்தான் தேரா இஸ்மாயில் கன் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தளத்தில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
பாகிஸ்தான் நாட்டின் தேரா இஸ்மாயில் கன் மாவட்டத்தில் அந்நாட்டின் இராணுவத் தளம் அமைந்திருக்கிறது. இங்கு இன்று அதிகாலை 2.30 மணியளவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 23 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, இராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, படுகாயமடைந்த 27 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருக்கிறார்கள். இவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இத்தாக்குதலுக்கு தலிபான் அமைப்போடு தொடர்புடைய தெஹ்ரீக் இ ஜிஹாத் பாகிஸ்தான் என்ற தீவரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி தொடங்கியதில் இருந்தே பாகிஸ்தானில் அதிகமான தாக்குதல்கள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு முதல் பாதியில் தாக்குதல்களின் எண்ணிக்கை 80% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.