இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆனால், செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்த தரவுகள் இல்லை என்றும் மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில், செயலிகள் மூலம் கடன் வழங்கும் சீன நிறுவனங்கள் குறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறைக்கான இணையமைச்சா் ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில், “இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) ஒழுங்காற்று விதிகள், பிற துறை ரீதியிலான விதிமுறைகளைப் பின்பற்றி வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது வணிக நடவடிக்கைகளை இந்தியாவில் தொடங்க முடியும்.
நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 380-ன் கீழ் இந்நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் நிறுவனங்கள் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில், சீனாவைச் சோ்ந்த 53 நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கான தரவுகள் இல்லை.
மேலும், நிறுவனங்கள் சட்டத்தில் ‘போலி நிறுவனங்கள்’ குறித்த வரையறை இல்லை. இருப்பினும், பதிவு செய்த நிறுவனம் ஓராண்டுக்குள் தனது வணிக செயல்பாட்டைத் தொடங்கவில்லை என்றாலோ, அல்லது தொடா்ச்சியாக இரு நிதியாண்டுகளுக்கு எவ்வித வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றாலோ, நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 248 (1)-ன் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அந்நிறுவனத்தின் பதிவை நிறுவனங்கள் பதிவாளா் ரத்து செய்ய முடியும்.
மேலும், இத்தகைய காலத்தில் செயல்படாத நிறுவனம் என்று அறிவிக்கக் கோரி விண்ணப்பிக்கத் தவறினாலும் அந்நிறுவனத்தின் பதிவு ரத்து செய்யப்படும். கடந்த 2021 ஏப்ரல் 4 முதல் கடந்த மாதம் 28-ம் தேதி வரை 1,55,217 நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.