கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷாண சிலை என்றும், மரகதக்கல் கொண்டு செய்யப்பட்டது என்றும், இருவேறு கருத்துகள் உலா வருகின்றன.
சிவ – விஷ்ணுவிடம் இருந்து வெளிப்பட்ட ஜோதியில் இருந்து தோன்றிய குழந்தை, கழுத்தில் மணியுடன் பம்பா நதிக்கரையில் பிறந்தார். இதனால், ஐயப்பனை மணிகண்டன் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஐயப்ப பக்தர்கள் காவி, கருப்பு மற்றும் நீல நிற உடை உடுத்தி, துளசி மணி மாலையைக் குருசாமி கையால் அணிந்து, 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, இருமுடி கட்டி, மலைக்குச் செல்வது வழக்கம்.
தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட கவசத்தால் மூடப்பட்ட 18 படிகளில் சென்று ஐயப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்கின்றனர்.
மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறந்து இருப்பது இல்லை. மலையாள மாதத்தின் கடைசி நாள் கோவில் நடை திறக்கப்பட்டு, மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சாத்தப்படும்.
அதேபோல, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதத்துடன் கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும்.
ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் மிகவும் புகழ் பெற்றவை. முக்கிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காகச் சபரிமலையில் குவிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொது மக்கள் சேவைப் பிரிவான சேவா பாரதி அமைப்புச் சார்பில், சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவைப்படும் குடிநீர், உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை வழங்கி வருகின்றனர்.
சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கே நெருக்கடியில் இருக்கின்றன. வனப்பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சேவாபாரதி சார்பில் உணவு, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், பல பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள், அன்னதானம், ஆம்புலன்ஸ் என ஒவ்வொரு வருடமும் ஐயப்ப சேவா ஜமாஷம் மற்றும் சேவா பாரதி செய்து வருகின்றன. சேவா பாரதியின் இந்த சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.