சத்தீஸ்கர் மாநில முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் இன்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 54 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. ஆனால், முதல்வர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், முதல்வரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து, முதல்வரை தேர்வு செய்வதற்காக மத்திய பழங்குடியின அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியப் பார்வையாளர்கள் குழுவை பா.ஜ.க. தலைமை நியமித்தது. இக்குழு கடந்த 10-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்றது.
பின்னர், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது. இக்கூட்டத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய், சட்டமன்றக் கட்சித் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்றார். அதேபோல, துணை முதல்வர்களாக அருண் சாவோ, விஜய் ஷர்மா ஆகியோர் பதவியேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.