வரும் 2024-ம் ஆண்டு ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் முன்னரே, அயோத்தி விமான நிலையம் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், அயோத்தி நகரில், சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மரியதா புருஷோத்தம் ஸ்ரீராம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.
சுமார் 821 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அயோத்தி விமான நிலைய கட்டுமானப் பணிகளை, இந்திய விமான போக்குவரத்து ஆணையகம் மேற்கொண்டுள்ளது.
திட்ட நிதியாக ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய விமான நிலையத்தில் 24 விமானங்களை ஒரே சமயத்தில் நிறுத்தி வைப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் பிரதான கட்டிடம் ராமர் கோவில் வடிவத்திலே அமைக்கப்பட உள்ளது. ஸ்ரீராமரின் சின்னமான வில், அம்பு மற்றும் இதர புராண சின்னங்கள் விமான நிலையத்தில் சுவர்களில் அழகிய வண்ணங்களில் தீட்டப்பட உள்ளது.
முதல் கட்டமாக 60 நபர்கள் வரை செல்லும் சிறிய வகை விமானங்கள் மட்டும் இயக்கப்பட உள்ளன. விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பணிகள் 2025 -ம் ஆண்டு நிறைவு பெறும்போது பெரிய ரக விமானங்களை இயக்கப்படும்.
இந்த நிலையில், முதல் கட்ட விமான இயக்க சேவைக்காக, ஓடுதள பாதை அமைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் 80 சதவீதற்கு மேல் நிறைவு பெற்றுள்ளன. இந்த விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இங்கிருந்து முதல் கட்டமாக டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து பிற நகரங்களுக்கும் விமான சேவை இயக்கப்படும்.
இந்திய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் வகையில், இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.