உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியது என்று முகமது ஷமி கூறியுள்ளார்.
ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து முடிந்தது. 10 சர்வதேச அணிகள் பங்குபெற்ற இப்போட்டியில் இந்திய அணி தான் விளையாடிய லீக் போட்டிகள் அனைத்திலும் அபாரமாக வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது.
நியூசிலாந்தை அரையிறுதியில் எதிர்கொண்ட இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்து அபார வெற்றி பெற்று 20 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தமுறை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில், ஆஸ்திரேலியா 6 வது முறையாக கோப்பையை வென்றது. இந்திய அணியின் இந்த தோல்வி வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்திய வீரர்கள் அனைவரும் சோகத்தில் ஓய்வறையில் இருந்தபோது பாரத பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதிலும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 7 போட்டிகளில் 24 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி-யை கட்டித்தழுவி ஆறுதல் அளித்தார்.
இந்த வீடியோ காட்சியும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது. இப்புகைப்படத்தை முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தற்போது முகமது ஷமி பிரதமர் ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு வந்து மிகவும் ஆறுதல் அளித்ததாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” தோல்விக்குப் பிறகு மனம் உடைந்து நாங்கள் ஓய்வறையில் அமர்ந்திருந்தோம்.
ஒரே ஒரு போட்டியால் எங்களது இரண்டு மாத கடின உழைப்பு வீண்போனதுப் போல இருந்தது. அப்போது நாங்கள் யாரும் எதிர்பாராதவிதமாகப் பிரதமர் மோடி அறைக்குள் வந்தார்.
அவர் அறைக்குள் வரப்போகிறார் என்று எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. அவர் வருகைக்கு முன்பு வரை நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. சாப்பிடவும் நாங்கள் விரும்பவில்லை.
அந்த சமயத்தில் தான் அவர் வந்தார். எங்கள் அனைவர்க்கும் ஆறுதல் சொன்னார். உண்மையில் அந்த நிமிடத்திற்கு பிறகு தான் நாங்கள் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தோம், பிறகு தான் சாப்பிடச் சென்றோம். பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியது” என்று கூறினார்.
அதேபோல் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.