ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
டெல்லி ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபானக் கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 2,800 கோடி ரூபாய்வரை இழப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., புதிய மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்தது.
இதன் பிறகு, டெல்லி மதுபான கொள்கையில் நடந்த பண மோசடி தொடர்பாக, மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறையும் கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. பின்னர், கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை ஆகிய இரு அமைப்புகளும் மணீஷ் சிசோடியாவை தனித்தனியாக நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும், பண மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனிடையே, கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், மறு ஆய்வு மனுக்களையும், அதற்கான ஆதாரங்களையும் கவனமாக ஆய்வு செய்துள்ளோம். எங்கள் கருத்துப்படி அக்டோபர் 30-ம் தேதியிட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான எந்த வழக்கும் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது.