நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லலித் ஜாவிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான தபாஸ் ராய்க்கும் முக்கிய தொடர்பு உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
மக்களவையில் நேற்று முன்தினம் புகைகுண்டு வீசப்பட்ட வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இந்து லலித் ஜாவை டெல்லி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட லலித் ஜாவிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தபாஸ் ராய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நமது ஜனநாயகக் கோயில் (நாடாளுமன்றம்) மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித் ஜா, டிஎம்சியின் தபஸ் ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறிய அவர், இருவர் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.