நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறியது தீவிர பாதுகாப்புக் குறைபாடு என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் நாட்களில் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அலுவல்கள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர். இவர்கள் கோஷமிட்டபடியே சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடினர். மேலும், தாங்கள் தயாராகக் கொண்டு வந்திருந்த கலர் புகைக் குண்டுகளையும் வீசினர். இவர்களில் ஒருவரை எம்.பி.க்கள் பிடிக்க, மற்றொருவரை அவைப் பாதுகாவலர்கள் பிடித்தனர்.
அதேபோல, இந்த சம்பவம் நிகழ்ந்த அதே நேரத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், 2 பேர் கோஷமிட்டபடியே கலர் புகைக் குண்டுகளை வீசினர். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படை வீரர்கள் பிடித்தனர். 4 பேரும் டெல்லி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதோடு, 4 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு சபாநாயரிடம் இருப்பதால், இதற்கு சபாநாயகர் பொறுப்பேற்று விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த நிலையில், புதுடெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா, “நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறி நடந்த விவகாரம் தொடர்பாக மக்களவை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக 15 – 20 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பு சபாநாயகரின் கீழ் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே, இது தொடர்பாக சபாநாயகர் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதன் அறிக்கை விரைவில் சபாநாயகருக்கு அனுப்பப்படும்.
நாட்டில் பொது சிவில் சட்டத்தை (யு.சி.சி.) அமல்படுத்துவல் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது நாட்டின் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அரசியலமைப்புச் சபையின் ஆணையாகும். ஆகவே, பொது சிவில் சட்டம் ஒரு பெரிய சமூக மற்றும் சட்ட மாற்றமாகும். இதுகுறித்து அனைவரின் கருத்தும் தேவை” என்றார்.