தனது 56-வது பிறந்தநாளான இன்று, ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர் இறப்பால் ஒத்திவைக்கப்பட்ட ஒரு தொகுதி தவிர, மற்ற 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3-ம் தேதி நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 115 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்தியப் பார்வையாளர்கள் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் நேற்று முன்தினம் ராஜஸ்தான் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தனர். அப்போது, முதல்வராக பஜன்லால் ஷர்மா, துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆல்பர்ட் வளாகத்தில் இன்று பதவியேற்பு விழா நடந்தது. இவ்விழாவில், இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடும் பஜன்லால் ஷர்மா முதல்வராக பதவியேற்றார். மேலும், தியாகுமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோரும் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.