உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி நிலம் சர்ச்சை தொடர்பான வழக்கில், ஷாஹி ஈத்கா மசூதியில் கள ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்திலுள்ள அயோத்தியில் இராமர் பிறந்த இடமான இராமஜென்ம பூமி இருப்பதுபோல, மதுராவில் கடவுள் கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண ஜென்மபூமி அமைந்திருக்கிறது.
அயோத்தியைப் போலவே இந்த நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. காரணம், இங்குள்ள கிருஷ்ணர் கோவிலை ஒட்டி, ஷாஹி மஸ்ஜித் ஈத்கா என்ற மசூதி அமைந்திருக்கிறது. இது முகலாய ஆட்சியின்போது கிருஷ்ணர் கோவிலை இடித்துவிட்டு, இந்த மசூதி கட்டப்பட்டதாக நீண்ட காலமாகவே சர்ச்சை நிலவி வருகிறது.
இதனிடையே, கடந்த 1968-ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாஹி மஸ்ஜித் ஈத்கா அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, சர்ச்சைக்குரிய நிலத்தில் 10.9 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், மீதமுள்ள 2.5 ஏக்கர் நிலம் மசூதிக்கும் பிரிக்கப்பட்டன.
எனினும், மொத்த நிலவும் கோவிலுக்குச் சொந்தமானது என்று ஹிந்துக்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பாக மதுரா நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, இவ்வழக்குகள் அலகாபாத் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மசூதி இடத்தில் கள ஆய்வு செய்வதற்கு உத்தரவிடக் கோரி, ஹிந்துக்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த மதுரா நீதிமன்றம், கள ஆய்வு நடத்த அனுமதி அளித்தது. இதை எதிர்த்து முஸ்லிம்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், இதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றமும் கள ஆய்வு நடத்த அனுமதி அளித்தது. இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி வளாகம் தொடர்பான வழக்கில், கள ஆய்வு செய்வதற்கு தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதேபோல, மதுரா விவகாரத்திலும் நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் அட்வகேட் கமிஷனர் தலைமையில் கள ஆய்வு நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும். அட்வகேட் கமிஷனர் நியமனம் மற்றும் மற்ற நடைமுறைகள் தொடர்பாக வரும் 18-ம் தேதி விரிவாக அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி ஷாஹி ஈத்கா மசூதி நிர்வாகத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்து விட்டது. மேலும், இவ்வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து விட்டது.