கர்நாடகாவில் பழங்குடியினப் பெண் ஒருவர், நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் மகளிர் ஆணையம், இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் காகத்தி காவல் நிலைய எல்லைக்குட்டபட்டது வந்தமுரி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூக இளைஞர் ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிவிட்டனர்.
இதையறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினரும், உறவினர்களும் மேற்கண்ட இளைஞரின் வீட்டுக்கு வந்த அவரது தாயை வீட்டிலிருந்து வெளியே இழுந்து வந்து, நிர்வாணமாக்கி கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள்.
தகவலறிந்து வந்த போலீஸார் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 7 பேரை கைது செய்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பா விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து மகளிர் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இச்சம்பவம் இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் கீழ், பிரிவு 354, பிரிவு 323, பிரிவு 509 ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.
இந்த வெறுக்கத்தக்க தாக்குதலை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய கொடூரமான செயல்களை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கிறது. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் மேற்கூறிய விதிகளை முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.), பிற தொடர்புடைய சட்ட அம்சங்களுடன் சேர்க்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்திருக்கும் மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா, இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல். இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆன் சைட்டில் விசாரித்து, அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஆணையத்தின் உறுப்பினர் டெலினா கோங்டுப் தலைமையிலான குழுவுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இதையடுத்து, விசாரணைக் குழு இன்று கர்நாடக புறப்பட்டுச் சென்றிருக்கிறது.