பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரா்கள் இந்திய படைகளிடம் சரணடைந்தனர். இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 16 ஆம் தேதி ‘விஜய் திவாஸ்’ கொண்டாடப்படுகிறது. இந்த போரின் மூலம் வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தளபதி ஆர்.ஹரிகுமார், இந்திய விமானப்படையின் துணைத் தளபதி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மேஜர் ஜெனரல் கவுரவ் கவுதம் மரியாதை செலுத்தினர்.