இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து மகளிருக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்பன்ப்ரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 428 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சுபா சதீஷ் 69 ரன்களையும், ஜெமீமா ரோட்ரிக்ஸ் 68 ரன்களையும், தீப்தி சர்மா 67 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணியில் தீப்தி சர்மா வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 188 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடிய நிலையில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் டிக்ளேர் செய்தார். இதன்பின் இங்கிலாந்து அணிக்கு 479 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 2வது இன்னிங்சின் இரண்டாவது பேட்டிங் நடைபெற்றது. ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி வந்த இங்கிலாந்து வீராங்கனைகள், ரேணுகா சிங் பந்துவீசிய 7வது ஓவரில் டாம்மி 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த சோஃபியா டங்க்லி 15 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஸிவர் பிரண்ட், பூஜா வஸ்தரேக்கர் பந்துவீசிய அதே ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 27.3 ஓவர்களில் 131 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
இந்திய அணியில் தீப்தி சர்மா 4 விக்கெட்டுகளையும், பூஜா வஸ்தரேக்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஒரே செஷனில் இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் இந்திய அணி வீராங்கனைகள் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.