நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை பிரதமர் மோடி வலுப்படுத்தி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரை, ஈசிஆர் ஆர்கே மாநாட்டு மையத்தில் பன்னிரு திருமுறை திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்ல்சியும், தமிழக பாஜக பொறுப்பாளருமான டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது :
பாரதப் பண்பாட்டின் மதிப்பிற்குரிய கண்காட்சியான “திருமுறை திருவிழா” விழாவில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன். மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரின் தெய்வீக திருமண சடங்குகளை நான் காணும் பாக்கியம் பெற்றுள்ளேன். முதலில், இங்கு இருக்கும் ஆதீனங்களுக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. இது எனக்கு ஒரு அனுபவமாக இருந்தது, தன்னலமற்ற சமூக உணர்வின் மூலம் விரைவாக இயல்புநிலையை மீட்டெடுக்கும் உற்சாகமான தமிழர்களை நான் கண்டேன். நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு எழுச்சியூட்டும் உதாரணம்.
சமீப காலங்களில், பாரதத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் அடிப்படை அம்சங்களை சவால் செய்ய ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா ஒரு தேசம் அல்ல, மாறாக தனித்துவமான மாநிலங்களின் ஒன்றியம் என்ற கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.
பாரதத்தின் ஒருமைப்பாட்டை கேள்வி கேட்பது தவறான எண்ணம், கெட்ட எண்ணம். ஒரு கெட்ட எண்ணத்தை, தவறான எண்ணத்தை எதிர்ப்பதற்கு நல்ல யோசனையை முன்வைப்பதே சிறந்த வழி என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற பிரிவினைவாதப் போக்குகள் பிரதமரால் திறம்பட தீர்க்கப்படுகின்றன, அவர் நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை தீவிரமாக வலுப்படுத்துகிறார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ஒட்டுமொத்த தேசமும் உடல் ரீதியாகவும், உணர்வு தியாகவும்ஒன்றிணைக்கப்படுகிறது என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.