தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மும்பை போலீசாருக்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர்.
மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர், ரத்தன் டாடாவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறும், இல்லாவிட்டால் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கு ஏற்பட்ட கதிதான் அவருக்கும் ஏற்படும் என்றும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மும்பை போலீசார், ரத்தன் டாடாவிற்கு வழங்கும் பாதுகாப்பை அதிகரித்தனர். இதனையடுத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் உதவியுடன், தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரின் தகவலை சேகரித்தனர். இதில், அவர் புனேவில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரின் வீட்டுக்கு சென்ற போலீசார், அவர் மனைவியிடம் விசாரித்தனர். விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் நிதி பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருப்பதும், கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என்பதும், அவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.