ஐயப்ப பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துமாறு கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சமீபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கேரளா முதல்வருக்கு வடகிழக்கு பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
சமீபத்தில் சபரி மலையில் நடந்த அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், சபரிமலை கோயிலின் முக்கியத்துவத்தையும், இறைவன் மேற்கொண்ட 40 நாள் ஆன்மீக பயணத்தையும் எடுத்துரைத்தார்.
இதுகுறித்து அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, ” சபரிமலைக்கு வரும் ஐயப்ப பதர்களின் காத்திருப்பு நேரம் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தைக் கட்டுப்படுத்த போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதேபோல் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், சுகாதாரமான வசதிகள், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துதரவேண்டும்.
தரிசனத்திற்கு நீட்ட நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருது பக்தர்களிடமிருந்தும், பல்வேறு செய்திகள் வாயிலாகவும் என் கவனத்துக்கு வந்தது. சமீபத்தில் தரிசனத்திற்காகக் காத்திருந்த இளம்பெண் ஒருவர் இறந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஐயப்பனைத் தரிசனம் செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார், பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அக்கடிதத்தில் வாயிலாக வலியுரித்துள்ளார்.