குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரம் என 65,000-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
எனவே, இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில், சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் 3,400 கோடி ரூபாய் செலவில் ‘சூரத் வைரப் பங்குச்சந்தை’ என்கிற மெகா அலுவலகம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் மொத்த பரப்பளவு 70.10 லட்சம் சதுர அடியாகும்.
தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. டெல்லியைச் சேர்ந்த கட்டடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு இக்கட்டடத்தை கட்டி முடித்திருக்கிறது.
இக்கட்டடத்தில் மொத்தம் 4,700 அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. இந்த வர்த்தக மையத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும். உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமாகக் கருதப்படும் அமெரிக்காவின் பென்டகனைவிட, இந்த சூரத் வைர வர்த்தக மையம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
இது சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமாக இருக்கும். மேலும், மெருகூட்டப்பட்ட வைரங்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய மையமாகவும் இது இருக்கும்.
தவிர, இறக்குமதி, ஏற்றுமதிக்கான அதிநவீன ‘சுங்க அனுமதி இல்லம்’, சில்லறை நகை வணிகத்திற்கான நகை வணிக வளாகம் மற்றும் சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்பான பெட்டகங்களுக்கான வசதி ஆகியவற்றை இந்த பங்குச்சந்தை உள்ளடக்கி இருக்கிறது.
இந்த சூரத் வைரப் பங்குச்சந்தை அலுவலக கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அதேபோல, 353 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் சூரத் விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.