பொன்முடி வீட்டில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்துப் பேசமாட்டார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சங்க காலத்தில் ஒய்மா நாடு என்றழைக்கப்பட்ட நகரம். ஒய்மாநாட்டு நல்லியகோடன் என்ற சங்ககால மன்னனின் மீது பாடப்பட்ட புகழ்பெற்ற சிறுபாணாற்றுப்படை நூலுக்கு உரித்தான ஊர். பராந்தக சோழனால் கற்கோவிலாக கட்டப்பட்ட திந்திரிணீஸ்வரர் ஆலயம் அமைந்திருந்ததால், திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டு, திண்டிவனம் என்றானது.
சோழர்களின் பெருமைக்குரிய கலாச்சார தொன்மத்தை தாங்கிய ராஜராஜ சோழனின் 21 கல்வெட்டுகள் திந்திரிணீஸ்வரர் கோவிலில் உள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் மெட்ராஸ் மாகாண முதலமைச்சர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இந்த மண்ணில் பிறந்தவர். அவர் முதல் அமைச்சரானதும், மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவர்.
தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாக கொண்டு வருவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டவர். தமிழ் வளர்ச்சிக் கழகம் அமைத்தவர். பள்ளிகளில் திருக்குறளைக் கட்டாய பாடமாக்கியவர்.
சிறந்த தமிழ் கவிஞர்களை கௌரவிக்க அரசவைக் கவிஞர் எனும் இருக்கையை நிறுவியவர். கிணறு வெட்ட மானியம் வழங்கியவர். பயிர் மற்றும் கால்நடை காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.
மாநிலம் முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்த ஓமந்தூரார் பிறந்த மண்ணில், இந்த வருடம் மே மாதம் கள்ளச்சாராயம் பருகியதால் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 22 பேர் உயிரிழந்தனர்.
கள்ளச் சாராய விற்பனையை செய்து வந்தது, அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமான, திண்டிவனம் வார்டு கவுன்சிலரின் கணவர் மருவூர் ராஜா.
கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு, 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கிய திமுக அரசு, சென்னை வெள்ளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு வழங்கிய நிவாரண தொகை 5 லட்சம், வெடிவிபத்தில் இறந்தால் 3 லட்சம் மட்டுமே.
கள்ளச்சாராயம் விற்றவர்களுக்குக் கூட 50,000 நிவாரணம் வழங்கியது. மக்களை சாராயம் குடிக்க வைத்து, திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே திமுக ஆட்சி நடக்கிறது.
திண்டிவனம் நகராட்சித் துணைத் தலைவராக இருப்பவர், பட்டியல் சமூகம் என்பதால், அவரைத் தொடர்ந்து அவமதித்து வருகிறது திமுக.
வார்டுகளில் நடைபெறும் ஆய்வுகளுக்குக் கூட துணைத்தலைவரை அழைப்பது இல்லை. இந்த மாவட்ட அமைச்சர் பொன்முடி சமூகநீதி சமத்துவம் திராவிட மாடல் என்று காலாவதியான வசனத்தைப் பேசுவார்.
ஒரு பட்டியலின சகோதரியை, மேடையில் வைத்து ஜாதியை குறிப்பிட்டு பேசியவர் அவர். இன்று வரை இந்த பிரச்சினையைப் பற்றியும் பேசவில்லை.
அமைச்சர் பொன்முடி மீது நடந்த அமலாக்கத்துறை சோதனையை, பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார். இந்தோனேஷியா மற்றும் துபாயில் அவர் வாங்கிய நிறுவனங்கள், அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்துப் பேசமாட்டார்.
மக்களை மடைமாற்ற இந்தித் திணிப்பு என்பார்கள். பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தமிழைத்தான் நாடு முழுவதும் திணிக்கிறார். நாளைய தினம், உத்திரப் பிரதேச மாநிலத்தில் இரண்டாம் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறவிருக்கிறது. தமிழைத் தொடர்ந்து பெருமைப்படுத்தி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியைத் திணிக்கிறார் என்றால், மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.
வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவது உறுதி. பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்க, தமிழகமும் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்துள்ளார்.