சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) உதவி காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு காவலர் படுகாயமடைந்ததாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் ஜாகர்குண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சி.ஆர்.பி.எஃப். 165-வது பட்டாலியனின் குழுவின், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பெத்ரே முகாமிலிருந்து உர்சங்கல் கிராமத்தை நோக்கி, பட்டாலியன் குழுவினர் முன்னேறிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சல்கள், சி.ஆர்.பி.எஃப். பட்டாலியன் குழுவினர் மீது திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில், சுதாகர் ரெட்டி என்கிற உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். மேலும், ராமு என்கிற காவலர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, சி.ஆர்.பி.எஃப். பட்டாலியன் குழுவினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 4 நக்சல்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மற்ற நக்சல்கள் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
சி.ஆர்.பி.எஃப். 165 பட்டாலியன் மற்றும் சத்தீஸ்கர் காவல்துறை 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் மாநிலத்தில் நக்சல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான சுக்மாவில் உள்ள பெத்ரேயில் செயல்பாட்டு மையத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.