கன்னியாகுமரியிலிருந்து மதுரை, சென்னை வழியாக பனாரஸுக்கு, ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற பெயரில், புதிய வாராந்திர இரயில் வரும், 28-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
கலாச்சார மையங்களாக திகழும் வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில், கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் முதற்கட்ட நிகழ்வு தொடங்கி நடைபெற்றது.
இதற்கு, தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற பெயரில், கன்னியாகுமரியில் இருந்து பனாரஸுக்கு புதிய வாராந்திர இரயில் வரும் 28-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
இதையொட்டி, இன்று சிறப்பு இரயில், கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் இரவு 11.35 மணிக்கு பனாரஸ் செல்கிறது. இந்த இரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.
வரும் 28-ஆம் தேதி முதல், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், இந்த இரயில் கன்னியாகுமரியிலிருந்து பனாரஸுக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கமாக பனாரஸில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு வரும்.
இந்த இரயில் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்பட உள்ளது.