கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோரப் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது.
பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, திற்பரப்பு அருவியில் நீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.