இந்திய- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஜி களமிறங்கினர். இதில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 2வது ஓவரில் அர்ஷிதீப் சிங் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அவரையடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வான் டெர் டுசென் அடுத்த பந்திலேயே டக் அவுட் ஆகி சென்றார். அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் இரு விக்கெட் இதுப்புக்கு 3 ஆக இருந்தது. இதனைத் தொடர்ந்து தொடக்க வீரராக களமிறங்கிய டோனி டி ஜோர்ஜி போராடி 28 ரன்களை எடுத்து அர்ஷிதீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஐடன் மார்க்ராம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்களை எடுத்தார்.
இதனால் 28வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 5 விக்கெட்களும், ஆவேஷ் கான் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். குலதீப் யாதவ் ஒரு விக்கெட்டை எடுத்தார். தற்போது இந்திய அணிக்கு 117 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.