திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
மேலும், குண்டும், குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு குழுவுக்கு 25 பேர் வீதம் நான்கு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்துக்கான அவசரகால உதவி எண்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம் எண் – 1077, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் எண் – 1070, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உதவி எண் – 101 மற்றும் 112, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம் எண் – 9498794987, மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு – 104 மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு – 108 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.