தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்திய, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.தொடக்க வீரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஜி களமிறங்கினர். இதில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 2வது ஓவரில் அர்ஷிதீப் சிங் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அவரையடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வான் டெர் டுசென் அடுத்த பந்திலேயே டக் அவுட் ஆகி சென்றார். அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் இரு விக்கெட் இதுப்புக்கு 3 ஆக இருந்தது. இதனைத் தொடர்ந்து தொடக்க வீரராக களமிறங்கிய டோனி டி ஜோர்ஜி போராடி 28 ரன்களை எடுத்து அர்ஷிதீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ராம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்களை எடுத்தார். இதனால் 28வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 5 விக்கெட்களும், ஆவேஷ் கான் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். குலதீப் யாதவ் ஒரு விக்கெட்டை எடுத்தார். இதனைத் தொடர்ந்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருத்ராஜ் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினர்.
இதில் ருத்ராஜ் 5 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். சாய் சுதர்சன் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரின் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 6 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 45 பந்துகளில் 52 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் தனது அறிமுக போட்டியிலே அட்டகாசமாக விளையாடி 9 பௌண்டரீஸ் அடித்து 43 பந்துகளில் 55 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக 17வது ஓவரில் இந்தியா 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 117 ரன்களை எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
தென் ஆப்பிரிக்கா அணியில் வியான் முல்டர் மற்றும் ஆண்டிலே பெஹ்லுக்வாயோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது முதன் முறையாக 5 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணியின் வீரர் அர்ஷிதீப் சிங்கிற்கு வழங்கப்பட்டது.