சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ராமன் சிங் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இவருக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்திருப்பதால் போட்டியின்றி தேர்வாகவிருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 2 கட்டங்களாக நடந்து முடிந்தது. 90 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் 54 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
அதேசமயம், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் பா.ஜ.க. தோ்தலை எதிர்கொண்டதால், புதிய முதல்வர் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும், ஏற்கெனவே 3 முறை மாநில முதல்வராக இருந்து ராமன் சிங்குக்கே மீண்டும் முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், புதுமுகத்தை முதல்வராக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்தது. இதையடுத்து, முதல்வரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் மத்தியப் பார்வையாளர்கள் குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவினர் சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தனர். இதில், புதிய முதல்வராக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் தோ்வு செய்யப்பட்டார். பின்னர், இவரது தலைமையில் புதிய அரசு பதவியேற்றது.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இப்பதவிக்கு முன்னாள் முதல்வர் ராமன் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்திருக்கிறது. ஆகவே, போட்டியின்றி ராமன் சிங் தேர்வு செய்யப்படவிருக்கிறார்.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மகந்த் ஆகியோருக்கு ராமன் சிங் நன்றி தெரிவித்தார். வேட்புமனு தாக்கலின்போது, இருவரும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.
71 வயதாகும் ராமன் சிங், இதுவரை 7 முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்வாகி இருக்கிறார். தற்போது போட்டியிட்டு வெற்றிபெற்ற ராஜ்நந்த்கான் தொகுதியில் மட்டும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.